Ponniyin Selvan I — The most personal cinematic experience

இந்த படத்தை இத்தோடு நான்கு வரை பார்த்தாகி விட்டது. அதும் பெரிய இடைவெளி ஒன்றும் விடாமல், ஒரே வாரத்தில். முதன்முறையாக ஒரு திரைப்படத்தை பற்றி தமிழில் பதிவு செய்கிறேன், அதற்கு காரணம் உண்டு.

முதலில், இதை படம் என்று சொல்லுவதற்கு பதில், இதை ஒரு அனுபவம் என்று சொல்வதுதான் பொருத்தம். அதிலும், இது எனக்கு முற்றிலும் ஒரு தனிப்பட்ட அனுபவமாக இருந்தது. எவ்வளவு தனிப்பட்டது? எப்படி தனிப்பட்டது? அதனை வார்த்தைகளால் எவ்வளவு தெரியப்படுத்த முடியும்? தெரியவில்லை. ஆதலால், அந்த உணர்வுகளை பிரதிபலிக்கும் விதமாக, என் அனுபவத்தை எனது தாய்மொழியாகிய தமிழில் எழுதுகிறேன். அமரர் கல்கியின் பாணியிலேயே கூறவேண்டும் என்றால் – இந்த அனுபவம், ஆதியும் அந்தமும் இல்லாத ஒரு கால வெள்ளம் போன்றது.

இதை எழுதும் போது, நான் என் ஞாபகத்தில் நன்றாக வைத்துக்கொண்ட விஷயம், இதை இன்னும் ஒரு இரு முறை கண்டிப்பாக திரையரங்கில் காண நேரிடலாம் என்பது (கொஞ்சம் எதிர்காலத்திற்கு சென்று பார்த்தேன். ஆமாம், இன்னும் , மூன்று முறை பார்த்து முடித்திருக்கிறேன்) . ஹ ஹ ஹா…, நெத்திக்குள் வைத்த புத்திக்குள் “பாலகனே, பாலகனே…” என்ற ஒரு குரல் பாடிக் கொண்டிருக்கிறது.

வாழ்வோடு பொன்னியின் செல்வன் நாவல் ஒன்றி போனது:

1950-ஸ் களில், இந்த கதை, ஒரு தொடர் கதை வடிவத்தில், வாரம் வாரம் கல்கி பத்திரிகையில் வெளி வந்தது. என் பாட்டனார், பாட்டியார், அந்த வாராந்திர அத்தியாயம் ஒவ்வொன்றையும் தனியாக எடுத்து, அவற்றை ஒரு புத்தகமாக கட்டினர். அந்த புத்தகம், என் தாத்தா, பாட்டி, என்று ஆரம்பித்து, எனது அம்மா, அவளுடைய சகோதரர்கள்-சகோதரிகள்,மகன்கள்-மகள்கள், பேரன்கள்-பேத்திகள், கொள்ளு பேரன்கள்-கொள்ளு பேத்திகள் என்று எல்லோர் கையிலும் சென்று, அந்த கதையை அவர்கள் வாழ்வோடு இணைத்தது.

இரண்டு நாட்களுக்கு முன், எனது பெரியம்மா, தன் சிறிய வயதில், தான் குந்தவையாக வேடம் இட்டிருந்த ஒரு புகை படத்தை என்னுடன் பகிர்ந்திருந்தார். மினிமலிஸ்டிக்கான முறையில் அமைந்திருந்த அந்த வேடம் — அணிகலன்கள், ஆடை, முக்கியமாக அந்த கொண்டை எல்லாம் என்னை மிகவும் ப்ராஹ்மிக்க செய்தது. மேலும், பொன்னியின் செல்வன் வார இதழைப் பலமுறை படித்து வளர்ந்ததில் எவ்வளவு இன்பம் இருந்தது என்பதையும், குறிப்பாக ‘குந்தவை’ கதாபாத்திரம் மேல் இருந்த அளவில்லா ஈர்ப்பைப் பற்றியும் குறிப்பிட்டு இருந்தார். சிறு வயதில், “எனக்கு நந்தினி வேடம், உனக்கு பூங்குழலி, அவளுக்கு குந்தவை.. “, என்று ஒரு போட்டியே நடக்கும் என்று நான் அறிந்திருந்தேன். ஆடி பெருக்கின் போது வீரநாராயண ஏரிக்கு சென்று கூத்தடித்த கதைகளையும் சொல்லி மெச்சிக்கொள்வார்கள்.

ஏறக்குறைய, எனது குடும்ப உறுப்பினர்களில், நான் தான் நாவலை கடைசியாகப் படித்தேன். ஒரு கட்டத்தில், “என்ன வெட்க கேடு இது? பொன்னியின் செல்வன் படித்தது இல்லையா?” என்று பெருசிலிருந்து பொடிசு வரை கேலி செய்யாத ஆள் இல்லை. இருப்பினும், எல்லாவற்றுக்கும் நேரம் என்ற ஒன்று வர வேண்டாமா?

2010 வாக்கில், பொன்னியின் செல்வன் படமாக்க படுவதாக பேச்சு வந்தது. அதில் வேறு மணி ரத்னம் இயக்குவதாக பேச்சு. அவ்வளவுதான்!

அட பல முறை எடுக்க முயற்சித்து நின்று போன விஷயம், இது எங்கேந்து…” என்று குடும்ப சுட்டு வட்டாரத்தில் பேச்சு எழுந்தாலும், மதுராந்தக தேவருக்கு சிவபக்தியின் மீது நாட்டம் போய் ஆட்சியில் ஆசை வந்தது போல், உள்ளம் மெதுவாக நாவலை நாடியது. படமாக்கப்படும் செய்தி, மெய்யோ பொய்யோ, நம் உள்ளத்தில் ஒரு படத்தை இயக்கி விடலாம் என்று நாவலைப் படிக்க முடிவு செய்தேன். என்ன செய்வது, நமக்கான அனைத்து உத்வேகமும் சினிமாவில் இருந்து தொடங்குகிறது.

குடும்பப் பொக்கிஷமாக பாதுகாத்து வரப்பட்ட புத்தகத்தைக் கேட்டபோது, “அதை இனிமேல் தர முடியாது, பத்திரமாக வைக்க பட்டுள்ளது, படிக்க குடுக்கற நிலைமைலே இல்லை…” என்று பதில் வந்தது. எனது அம்மாவோ, அமரர் மணியத்தின் படங்கள் உள்ள பிரதியை தான் நான் படிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள். ஊரில் உள்ள ஒவ்வொரு நூலகத்தையும், புத்தகக் கடையையும் அழைத்து மணியம் படங்களுடன் இருந்த நாவல் உள்ளதா என்று விசாரித்து, ஒரு வழியாக, நான்கு புத்தகங்களாக பிரித்து கட்டப்பட்ட தொகுப்பை புத்தகக் கடை ஒன்றில் இருந்து வாங்கிக்கொடுத்தாள். ஆனால், அதில் சிலப்பக்கங்களை காணவில்லை (அந்த பழைமையான நறுமணத்துடன் நன்கு பாதுகாக்கப்பட்ட அந்த பதிப்பு இன்னும் எனது புத்தக அலமாரியில் உறங்குகின்றது).

ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு, ஆனந்த விகடன் பதிப்பகம் (கோடி புண்ணியம்), அமரர் மணியத்தின் சித்திரங்களை மீட்டெடுத்து புதிய மெருகுடன் நாவலை 5 பகுதி புத்தகமாக வெளியிட்டனர். முதல் வாசிப்பை முடித்ததுமே, உள்ளுக்குள் செயலாக்க நிறைய இருந்தது. வந்தியத்தேவன் மேல் அபார காதல் உண்டானது. முதல் முறை படிக்கும் பொழுதே ஐஸ்வர்யா ராயைத்தான் நந்தினியாக கற்பனை செய்தேன். சில ஆண்டுகள் கடந்து, மணிரத்னம் இதை நிச்சயமாக திரைப்படமாக எடுக்கப் போவதாக அறிவித்தார். அப்பொழுது நான் அதை ஏற்கனவே மேலும் இரண்டு முறை படித்து முடித்திருந்தேன். திரைப்படத் தழுவல் தொடர்பாக வீட்டிலும், நாவலின் மாயாஜாலத்தில் விழுந்து தத்தளித்து கொண்டிருந்த நெருக்கமான நண்பர்களுடனும் விவாதங்கள் எழ ஆரம்பித்தன. சில காட்சிகள் எப்படி வடிவமைக்கப்படும், நடிகர்கள் நியாயம் செய்வார்களா, என்று தொடர்ந்து பேச்சு. ஆனாலும் மணிரத்னித்தின் மீது சொல்லப்படாத (அபார) நம்பிக்கை. அவருடைய பாணி இந்தக் கதையை எப்படி திரையில் காண்பிக்கப் போகிறது என்ற ஆர்வம்.

மணி ரத்னம் படைப்புகளின் தாக்கம்:

கல்கியின் பொன்னியின் செல்வன் எந்த அளவுக்குப் பிடித்தமானதோ, அதேபோல் இயக்குநர் மணிரத்னத்தின் படைப்புகள் பற்றிய விவாதங்களும் எப்போதும் மேசைக்கு வரும் ஒன்று (கே.பாலச்சந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா போன்ற பிற திரைப்படத் தயாரிப்பாளர்களில்). மணியின் படம் அமைக்கப்பட்ட விதம் எப்போதும் ஆர்வத்தைத் தூண்டியது. 1992-ல் ரோஜா வெளிவந்த போது முழு நகரமும் வெறிச்சோடியது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. நான் படத்தைப் பார்த்தபோது, ​​அது ஏன் வித்தியாசமாக உணர்ந்தது என்பதை என்னால் வெளிப்படுத்த முடியவில்லை. நான் சமீபத்தில் கூட என் நண்பனிடம் சொன்னபோது, தமிழில் அப்பொழுதுதான் முதன்முதலாக, படம் முடிந்த பின், எண்டு கிரேடிட்ஸ் என்ற ஒன்றை பார்த்தேன் என்றேன் — தமிழா தமிழா பாடல் பின்னணியில், கிரேடிட்ஸ் ஓடியது. திரை அணையும் வரை காத்திருக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தப் பெறுமை என்னைச் சேறும்.

தனது படம் வெளிவரும் போதெல்லாம் பைத்தியமாகி, அதில் ஒரு பகுதியாக ரசிகனாக இருக்கும் விருப்பம், திருடா திருடா, பம்பாய் என்று படம் வர வர, ஒரு மரபுப் போல் தொடர்ந்துக் கொண்டிருந்தது. தற்போதைய கட்டத்தில், சில அறிவூட்டும் திரைப்பட பகுப்பாய்வு வீடியோக்கள், திரைப்பட விமர்சகர்களின் ஆழமான விவாதங்களின் உதவியால், இந்த இயக்குனரின் கைவினை எவ்வளவு வித்தியாசமானது, ஏன் இவளவு வசிகீரதிருக்கு நம்மை தள்ளுகிறது என்பதை என்னால் ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஒரு கட்டத்திற்கு அப்பால், அவரது பாணி எனக்கு ஏன் விதிவிலக்காக, மாயாஜாலமாக இருக்கிறது என்பதை இன்னும் முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை — அந்த மர்மத்திலும் ஒரு அழகு இருக்கிறது. “ஓ! இதுதான் இவரது சூத்திரம்.” என்று சொல்ல முடியாத அழகிய மர்மம்.

பொன்னியின் செல்வன் – பாகம் ஒன்று, ஒரு அனுபவம்:

அப்படி என்னதான் அனுபவம் இது. பொல்லாத அனுபவம். எங்கிருந்து தொடங்குவது? ஆடியோ வீடியோ ஊடகம் அதன் வேலையை முழுமையாகச் செய்து என்னை ஆக்கிரமித்ததை பற்றி சொல்லவா. ஒளிப்பதிவு, கதையோட்டம், பின்னணி இசை, இதில் எதை ரசித்து, எங்கு தங்கி கவனம் செலுத்துவது என்று தெரியாமல் திண்டாடியதை பற்றி சொல்லவா. நந்தினி வந்தியத்தேவனிடம் இருந்து ஓலையைப் பெரும்போதும், குந்தவை அவனிடமிருந்து ஓலையைப் பெரும்போதும், அந்த உடல் மொழியில் இருக்கும் அழகிய வித்யாசங்களை காட்டியதைபற்றி பேசுவதா.

பாடல்களை நேரடியான முறையில் கையாளாமல், அவற்றை பிரித்து, அதன் இடையே காட்சிகளை இணைத்து கதையை கொண்டு சென்ற அழகை பற்றி பேசுவதா. ஆதித்த கரிகாலனின் மனநிலையிக்கு ஏற்ப பிசாசு மாதிரி ரவிவர்மனின் கேமரா, வளைந்து அசைந்ததை பற்றி பேசுவதா. சோழா சோழா பாடல் எப்படியோ ஆரம்பித்து, திடீரென்று கருமேகத்திற்குள் புகுந்து, ஒரு லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் மண்டலத்திற்கு சென்று போனதை விவரித்து பேசுவதா. விக்ரமின் இடைவிடாமல் மாறிக்கொண்டிருந்த முகபாவங்கள், அம்புகளை ஏவிக்கொண்டிருந்த அந்த வளைந்த புருவங்கள், எனக்கு சிவாஜி கணேசனை ஞாபகப் படுத்திக்கொண்டிருந்தது. பாண்டிய மீன் கொடி வெட்டப்படும் போதும், மஹிந்த ராஜாவின் கொடி கரை ஒதுங்கிய போதும், அதை காட்டிய விதம் ஒரு தனி அழகு.

கதாபாத்திரங்களின் உதடுகள் ஒருபுறம் உரையாடல் செய்து கொண்டிருக்க, அவர்களின் கண்கள் ஒரு அத்யாயத்தையே பரிமாற்றம் செய்துகொண்டிருந்ததை ஒரு கட்டுரையாக எழுதுவதா? நந்தினியாகிய ஐஸ்வர்யா ராய் , வந்தியதேவனாகிய கார்த்தியிடம் விழியால் வினவிக்கொண்டிருந்ததை, சப்டைட்டில்ஸ் போட்டால், ஒரு புத்தகமே போடலாம்.

புத்தகத்தில் இருளில் நடக்கும் பல சம்பவங்கள், படத்தில் பகல் வேளையில் நடப்பதாக மாற்றப்பட்டிருந்ததை கவனித்தபோது, மணிரத்னத்தின் காட்சிகள் பொதுவாக இருள்பின்னணியில் அமைக்கப்பட்டிருக்கும் என்பதற்கு முரணாக இருந்த அழகை சொல்வதா. கன்னத்தில் முத்தமிட்டல்/கடல் படத்தில் புயல் காட்சிகள் எப்படி இருந்தனவோ, அதேபோன்று இங்கு போர்க் காட்சிகள் மற்றும் கடல் நடுவே அமைந்துள்ளே காட்சிகள் வரும்பொழுது, சில இடங்களில் மட்டுமே கேமராவில் வைடர் ஷாட்களாக வைத்து முக்கால் வாசி, கலவரத்தின் நடுவிலயே அமைத்த விதம் மிகவும் யதார்த்தமாக சம்பவங்களை காட்டுகின்றன. இதனால் வீஎஃபக்ஸும் குறைவாக பயன்படுத்த பட்டிருக்கின்றது.

அழகான ராட்சசியே க்கு அப்புறம் படைப்பாற்றல் ரீதியாக என்னை மிகவும் கவர்ந்த பாடல் ராட்சச மாமனே என்று நினைக்கின்றேன். இந்த இரண்டு பாடல்களின் கேமரா கோணங்கள் (வைடர் ஷாட்ஸ்) கூட சில இடங்களில் மிகவும் ஒத்திருந்தது.

வந்தியதேவனும் குந்தவையும் முதன்முதலில் பார்த்துக்கொள்ளும் இந்த பாடலைப் பார்த்து போது, நாயகனுக்கும் நாயகிக்கும் பார்த்த உடனேயே பிடித்து போகின்ற மாதிரி நிகழ்வுகளை இன்று வரை நம்மிடம் அதே தாக்கத்துடன் எப்படித்தான் படைக்கிறாரோ மணி என்று ஆச்சரியப் பட்டேன்.

தேவராளன் ஆட்டத்தில் தரையில் கையை தட்டி அடித்து ஆடும் போது தலை முதல் கால் வரை மின் அதிர்வுகள்.

இது வரை மணிரத்தினம் இயக்கிய ஒவ்வொரு படமும் இந்த பிரம்மாண்டமான படைப்பை உருவாக்குவதற்கான ஒரு தயாரிப்பாகவே தோன்றியது. இயக்குனர் இந்த நாவலை எவ்விதம் திரைக்கு கொண்டுவந்திருக்கிறார் என்றால், கல்கியின் கதாபாத்திரங்கள் மணிரத்தினம் படங்களின் பாணியில் உரையாடினால் எப்படி இருக்குமோ அப்படி.

பழையாறில், வந்தியத்தேவனுக்கும் குந்தவைக்கும் நடந்த உரையாடல், சோழர் காலத்துக்கு போய் “ட்ரெயின் லேந்து குதிப்பியா?” என்று கார்த்திக்கும் சக்தியும் பேசுவது போல் இருந்தது. அதே சமயம் நாவலில் இருக்கும் கதாபாத்திரங்களின் குணாதிசயங்கள் துளியும் குறையவில்லை. எனவே இந்த இருவரின் தீவிர ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய திருவிழா.

ஹாரி பாட்டர் சீரிஸில் அல்ஃபோன்சோ க்யோரான், பிரிசனர் ஆஃகப் அஸ்காபான் பாகத்தை கையாண்ட விதம் கொஞ்சம் ஞாபகம் வந்தது.

ராவணன் படத்திலிருந்தே, மணி படங்களின் ஒவ்வொரு காட்சியின் நீளத்தின் அளவும் கம்மி ஆகிவிட்டது. செக்க சிவந்த வானம் படத்தில், ஒரு கதையின் சிறப்பம்சங்களை மட்டும் துண்டு துண்டாக எடுத்து காட்டும் பாணியை கையாண்டபோது, எந்த ஒரு உணர்விலும் / கதைப்போக்கிலும் என்னை தங்கவிடாத உணர்வை தந்தது. இங்கும் அந்த பாணியை உபயோகபடித்திருக்கிறார். ஆனால் இந்த முறை அது நன்றாகவே வேலை செய்திருக்கிறது.

செக்க சிவந்த வானம் கதை அளவில் பொன்னியின் செல்வனோடு வேறு பட்டாலும், அமைப்பால் அது பொன்னியின் செல்வனின் ஸ்பிரிச்சுவல் தழுவலாகவே தோன்றுகிறது, ஒரு வார்ம் அப் என்று சொல்லலாம்.

குறை என்ற ஒன்று….. அது இல்லாமலும் இல்லை. இரண்டாம் பகுதியில் வரும் சில சண்டைக்காட்சிகளை குறைத்து மேலும் கதாபத்திரிங்களுடனேயே நம்மை சிறிது நேரம் பிரயாணம் செய்ய வைத்திருக்கலாம்.

நம் பூங்கழிலிக்கு என்று ஒரு படமே தேவை! அந்த பாத்திரத்தின் அழகை இன்னும் நுணுக்கமாக விவரிக்க வேண்டும். இரண்டாம் பாகத்தில் அது பூர்த்தி ஆகும் என்று நம்புகிறேன்.

இந்தத் திரைப்படத்தை தொடர்ச்சியாகப் பார்ப்பது, மீண்டும் மீண்டும் மயிர்கூச்செரியும் ஒரு உற்சாகமான செய்தியைக் கேட்பது போல…

எல்லாவற்றிற்கும் மேல், எனக்கும், அந்த மாபெரும் திரையில் நடந்துக்கொண்டிருந்த நிகழ்வுக்கும் இடைவிடாமல் சம்பாஷணை ஒன்று நடந்து கொண்டே இருந்தது. அதுதான் அந்த தனிப்பட்ட அனுபவம். மை மோஸ்ட் பெர்சனல் சினிமேட்டிக் எக்ஸ்பீரியன்ஸ்!

One thought on “Ponniyin Selvan I — The most personal cinematic experience

Leave a comment